Sunday 17 December 2017

7 Minutes 7 நிமிடங்கள் - குறும்படம் (தெலுங்கு)

துபானம் குடித்து விட்டு வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகளால் சாலைகளில் தறி கெட்டு ஓடும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் பற்றி சொல்லும் படம். 


ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் பேசும் முகமறியாத நபர், ஆட்டோ ஓட்டுனரின் நான்கு வயது  மகள் விபத்தில் அடிபட்டு அவர் வீட்டுக்கு முன்பு கிடப்பதாகவும், விபத்தில் சிக்கிய அவர் மகளை ஏழு நிமிடங்களுக்குள் மருத்துவமனையில் சேர்க்கா விட்டால் உயிர் போய் விடும் என்று சொல்கிறார், பதறி போய் வீட்டுக்கு சென்று மனைவியிடம் விசாரிக்கும்போது மகள் வீட்டில் இல்லை என்று தெரிகிறது. மீண்டும் வரும் தொலைபேசி அழைப்பில் அந்த நபர் ஆட்டோ ஓட்டுனரை ஏழு நிமிடங்களுக்குள் அருகில் இருக்கும் சுடுகாட்டுக்கு வர சொல்கிறார், வராவிட்டால் மகளை நிரந்தரமாக பார்க்க முடியாமல் போய் விடும் என்று மிரட்டுகிறார். 

சுடுகாட்டுக்கு சென்று பார்க்கும் போது அங்கு ஒரு சடலம் எரிந்து கொண்டிருக்கிறது, அது தன் மகளோ என்று நினைத்து அழும்போது மீண்டும் வரும் தொலைபேசி அழைப்பில் பேசும் மர்ம நபர் மகள் உயிரோடு திரும்ப வேண்டுமென்றால் ஆட்டோ ஓட்டுனரை அருகில் இருக்கும் மேம்பாலத்திற்கு ஏழு நிமிடங்களுக்குள் சென்று அங்கிருந்து கீழே செல்லும் எதாவது ஒரு வாகனத்தின் முன் குதித்து அடிபட்டு சாக சொல்கிறார், மகளை காப்பாற்ற வேறு வழி இல்லாததால் ஆட்டோ ஓட்டுனர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயலும் போது வருகிறது அந்த ட்விஸ்ட்... ஆட்டோ ஓட்டுனரின் மகள் அவரை அழைத்தபடியே  ஒரு கடிதத்தோடு ஓடி வருகிறாள், ஆட்டோ ஓட்டுனரின் மகளை கடத்தி வைத்து கொண்டு இவ்வளவு நேரமாக  தவிக்க விட்டது யார், ஏன் என்ற கேள்விகளுக்கு குறும்படத்தின் கிளைமாக்ஸில் விடை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.