Tuesday 29 October 2019

அங்கூர் அரோரா மர்டர் கேஸ் - திரைவிமர்சனம்


சில திரைப்படங்கள் மிகவும் நல்ல கருத்தியலை கொண்டதாகவும், சலிப்பு தட்டாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் காட்சியமைப்புகளுடனும் சிறப்பாக இருக்கும், ஆனால் ஏதோ சில காரணங்களினால் அந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையாமல், ரசிகர்களிடம் சரியாக சென்றடையாமல் இருக்கும், அத்தகைய நல்ல திரைப்படங்களை இணையத்தில், தொலைகாட்சியில் காணும்போது இவ்வளவு நல்ல திரைப்படம் ஏன் வெற்றியடையாமல் போனது என்று நம் மனதில் கேள்விகள் எழும், அப்படி மக்கள் மனதில் சிந்திக்க தூண்டும் நல்ல கருத்தியலை கொண்ட திரைப்படம் தான் இந்தி மொழியில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த அங்கூர் அரோரா மர்டர் கேஸ். 

கதை: ஒரு பெயர்பெற்ற மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனையில் ஒரு சிறுவனுக்கு குடல்வால் நீக்க அறுவை சிகிச்சையின்போது அலட்சியத்தினால் செய்யும் ஒரு சிறு தவறால்  அந்த சிறுவன் (அங்கூர் அரோரா) உயிரிழந்துவிட அதை மூடிமறைத்து  சிறுவனின் மரணத்திற்கு தான்  காரணமில்லை, அது நுரையீரல் செயலிழப்பினால் ஏற்பட்டது என்று ஜோடிக்கிறார். ஆனால் அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை செய்யும் இளைஞர் - கதாநாயகன் - அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இன்னொரு பயற்சி மருத்துவரான தன் காதலியின் உதவியோடு உண்மையை தெரிந்து கொண்டு உயிரிழந்த சிறுவனின் தாய்க்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைக்க செய்ய போராடுகிறார், இந்த சட்டப்போராட்டத்தின்போது அந்த புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் குறுக்கு வழியில் தனக்கு எதிராக இருக்கும் சாட்சிகளை மிரட்டி தனக்கு ஆதரவாக மாற செய்வது, முக்கிய சாட்சியாக வர இருக்கும் ஒரு  ஆய்வக அறிக்கையை தயாரித்த ஆய்வகத்தில்  சேமிக்கபட்டிருக்கும் சாம்பிளை ஆள் வைத்து அழிப்பது என்று சூழ்நிலை காரணமாக வில்லத்தனத்தின் மொத்த உருவமாக மாறுகிறார், இவ்வளவு செய்தும் அந்த உண்மையை மறைக்க முடிந்ததா? அல்லது அவர் செய்த தவறு வெளிவந்து தண்டிக்கப்பட்டாரா? என்பதை மிகவும் சுவாரஸ்யமாக படமாக்கி இருக்கின்றனர்.

உயிர்களை தான் சிகிச்சை செய்து காப்பாற்றுவதால் தன்னைத்தானே கடவுளாக நினைக்கும் தலைகனம் கொண்ட மருத்துவராக கே கே மேனன், தானே மிகசிறந்த மருத்துவர் என்று தன் சக மருத்துவர்களிடமும் பயிற்சி மருத்துவர்களிடமும் தன் ஈகோவை அடிக்கடி வெளிப்படுத்தி  வெறுப்பை சம்பாதிக்கிறார், அறுவைசிகிச்சை முடிந்ததும் தன் மகனின் வயிற்றுவலி நீங்கிவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருந்து தன் மகனை இழந்து வாடும் தாயாக திக்சா சோப்ரா, இவர் தன் கணவனை பிரிந்து வேலைக்கு சென்று தன் மகனை காப்பாற்றுவதாக காணபிக்கப்படுவதால் ஆரம்பம் முதல் இறுதிவரை இயல்பாகவே இவர் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் நிழலாடுகிறது. இளம் பயிற்சி மருத்துவராக வரும் அர்ஜுன் மாத்தூர் சிறுவனின் மரணத்தில் இருக்கும் உண்மையை தெரிந்த தன் காதலியிடம் சாட்சியாக மாறச் சொல்லி கெஞ்சுவதும், ஆனால் உண்மையை வெளியே சொன்னால் அதனால் வரும் பின்விளைவுகளை நினைத்து கலங்கி சாட்சியாக மாற மறுக்கும் காதலியாக விகாஷா சிங், 

இரட்டை வாழ்க்கை வாழும் வக்கீலாக காண்பிக்கப்படும் பவொலி டாம் ஆரம்பத்தில் இவரது நடவடிக்கைகள் சந்தேகத்தை தூண்டும்படி இருந்தாலும், போகப்போக இவருக்கு எதிர்த்தரப்புக்கும் இடையே நடக்கும்  நீதிமன்ற விவாதங்களில் ஜொலிக்கிறார். சட்டப் போராட்டத்தில் கடைசி நம்பிக்கையாக இருக்கும் ஆய்வக அறிக்கையும் அழிந்த பிறகு இனி எல்லாம் முடிந்தது அவ்வளவுதான் என்று நினைக்கும்போது வரும் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் நீதியை நிலைநாட்டுகிறது. 

எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் இருப்பதாக காட்டப்படும் அதே வேளையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தவறு செய்யும் குற்றவாளிகள் எவ்வளவு எளிதாக தப்புகின்றனர் என்றும் காண்பித்திருக்கின்றனர் . எளிய மக்கள் நீதிக்காக போராடும்போது எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது, ஒரு உண்மையை நீதிமன்றத்தில் நிரூபித்து நீதியை பெற எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று அங்கூர் அரோரா மர்டர் கேஸ் திரைப்படம் மூலம் வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குனர் சுஹைல் தட்டாரி. 

திரைப்படம் பின்வரும் இணைப்பில் யூ டியூபில் பார்க்க: இங்கு கிளிக் செய்க
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்