Thursday 11 October 2018

ராட்சசன் - திரைவிமர்சனம்



முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படம், முதல் படத்தில் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், இந்த படத்தில் நம்மை அதிர வைத்திருக்கிறார். நகரத்தில் வரிசையாக பள்ளி மாணவிகள் கடத்தப்படுகிறார்கள், மாணவிகள் கடத்தப்பட்ட இரண்டாம் நாளில்,  மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு  இறந்த நிலையில் அவர்களின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், சினிமாவில் இயக்குனராக முயற்சிக்கும் விஷ்ணு விஷால், ஒரு சைக்கோ கொலைகாரனின் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உலகம் முழுவதும் நடந்துள்ள பல சைக்கோதனமான தொடர் கொலைகள், சைக்கோ கில்லர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது சைக்கோதனமான நடவடிக்கைகள், அவர்கள் ஏன் அப்படி சைக்கோவாக மாறினார்கள் போன்ற தகவல்களை சேர்த்து வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கி, அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கேட்கிறார்.



எவ்வளவோ முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காததால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் உறவினர் சிபாரிசில் கிடைக்கும் காவல் துறை பணியில் சேர்கிறார். அப்போது நடக்கும் சைக்கோதனமான தொடர் கொலைகளில் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை உயர் அதிகாரிகள் திணற, புதிதாக வேலைக்கு சேரும் விஷ்ணு விஷால் தான் ஏற்கெனவே திரைப்படம் எடுப்பதற்காக சேகரித்து வைத்துள்ள சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய தகவல்களோடு ஒப்பிட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் துப்பறியும் த்ரில்லர் கதை. 

விஷ்ணு விஷாலின் சகோதரி மகள் படிக்கும் வகுப்பு ஆசிரியையாக வருகிறார் அமலா பால், அக்கா மகளுக்காக விஷ்ணு விஷால் ரிப்போர்ட் கார்டில் அப்பா போல் கையெழுத்து போட்டு அமலா பாலிடம் மாட்டிகொள்ளும் போது விஷ்ணு விஷாலையே அப்பாவாக நடிக்க சொல்லி அழைத்து வந்து, இறுதியில் கையும் களவுமாக அமலா பாலிடம் சிக்கி வழியும் காட்சிகள், அமலா பால் வளர்க்கும் குழந்தை சூப்பர் மார்கெட்டில் சிசிடிவி இருப்பது தெரியாமல் செய்யும் பேனா, ஸ்கெட்ச் என்று சுட்டு டிரெஸ்சுக்குள் மறைத்து வைத்து கொள்ள, அது தெரிந்து விஷ்னு விஷால் பணம் செலுத்தி விட்டு செல்லும் காட்சிகள் எல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறது. 




மிகவும் விறுவிறுப்பாக செல்லும் த்ரில்லர் கதையின் இடையில் எதிர்பாராத திருப்பமாக கதாநாயகனின் சொந்த சகோதரி மகளும் (பள்ளி மாணவி) சைக்கோ கொலைகாரனால் கொல்லப்படுகிறார். வெறி கொண்டு கொலைகாரனை தேடி புறப்படும் விஷ்ணு விஷாலுக்கு தடைகற்களாக வழக்கமாக எல்லா துறைகளிலும் இருக்கும் சீனியர், ஜூனியர் ஈகோ பிரச்சினை வருகிறது, உயர் அதிகாரியாக வரும் பெண் அதிகாரி விஷ்ணு விஷாலுக்கு தன்னை விட அதிக திறமை இருப்பது தெரிந்தவுடன் அவரை மட்டம் தட்ட "உன் சினிமா கதையெல்லாம் இங்க வந்து சொல்லாதே போய் சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா" என்று சக காவலர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி துரத்துவது, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விஷ்ணு விஷாலை மட்டம் தட்டி பேசுவது என்று தன் அதிகார பலத்தை காண்பித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். 

# மீ டூ - ஹேஷ் டாக் வைரலாகி வரும் நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு வேலியாய் இருக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு டார்ச்சர் தருவதை காண்பித்து குற்றவாளி இவர் தான், குற்றவாளியை மடக்கி பிடித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் இருக்கும்போது மீண்டும் மாணவிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுவது எதிர்பாராத டிவிஸ்ட். சைக்கோ கொலையாளியிடம்  சிக்கி கொள்ளும் மாணவி, தான் கொல்லப்பட போவது அறிந்து பாத்ருமூக்குள் நுழைந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு கண்டு வந்து உட்கார வைக்கும் திக் திக் ரகம். 

இடைவேளைக்கு பிறகு காட்டப்படும் அந்த கொடூர சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரம் அதிர வைக்கிறது, அவன் ஏன் அப்படி மாறினான் என்பதற்காக காண்பிக்கப்படும் ஃப்ளாஷ்பேக் கதை விழிகளில் கண்ணீரை வர வைக்கிறது, விஷ்ணு விஷாலின் சகோதரி கணவராக வரும் முனீஸ்காந்த், போஸ்ட் மார்டம் செய்யும் மருத்துவராக வரும் நிழல்கள் ரவி. விஷ்ணு விஷாலின் கூட பணிபுரியும் காவலராக வந்து சைக்கோ கொலைகாரனால் கொல்லப்படும் காளி வெங்கட் என்று எல்லோரும் தங்கள் பங்கை நிறைவாக  செய்திருக்கிறார்கள், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேகமாக செல்லும் கதையின் விறுவிறுப்புக்கு காமெராவும், இசையும் (கிப்ரான்) துணை புரிகிறது. 

திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரும், பள்ளி மாணவிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஒரு நல்ல சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் திரைப்படம் தந்ததற்காக ராம்குமார் & டீமுக்கு ஒரு சபாஷ் போடலாம். 

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர் - தமிழர் டைம்ஸ்

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்