Sunday, 30 September 2018

பரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்


ந்த சமூகம் மனிதர்களை உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிரித்து அதன் மூலம் உயர்சாதியினர் தாழ்ந்த சாதி மக்களை நாய்களை போல் கேவலமாக தொடர்ந்து நடத்தி வருவதையும், காலகாலமாக உயர்சாதி மக்கள்  கீழ் சாதியினருக்கு இழைத்து வரும் அநீதிகளையும், தாழ்ந்த சாதி மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளையும், அவமானங்களையும் தைரியமாக தோலுரித்து காட்டியிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள்.

நாயகன் கதிர் வளர்த்து, வேட்டைக்கு பயன்படுத்தி வரும் செல்ல நாய் கருப்பியை உயர் சாதியினர் ரயில்வே டிராக்கில் கட்டி போட்டு இரக்கமில்லாமல் அந்த ஐந்தறிவு ஜீவனை அழிக்கும் காட்சியோடு
துவங்கும் திரைப்படம், வலிந்து திணிக்கபடாமல், படம் முழுவதும் இயல்பாக வரும் சம்பவங்களோடு நம்மையும் சேர்ந்து பயணிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் வெற்றி.  இந்த சமூகம் தங்கள் சாதி மக்களை கேவலப்படுத்தி வருவதையும், போலீஸ்காரர் ஒருவர்  வயது முதிர்ந்த மனிதர் என்று கூட பார்க்காமல் தன்னை எதிர்த்து பேசி விட்டார் என்பதற்காக காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைப்பதை கண்டு பொறுத்து கொள்ள முடியாமல் பி.எல் படித்து வழக்கறிஞர் ஆனால் தான் சட்டத்தின் துணையோடு தன் சமூக மக்கள்  இந்த அவமானங்களில் இருந்து விடுபட முடியும் என்ற உயர்ந்த குறிக்கோளோடு கல்லூரியில் பி.எல் படிக்க வரும் மாணவன் பரியேறும் பெருமாள் (கதிர்) சந்திக்கும் சோதனைகளையும், வேதனைகளையும் கண்ணீரோடு காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கும் அவர் டீமிற்கும் ஒரு சபாஷ். படிக்க வரும் கல்லூரியில் ஆங்கிலம் தெரியாததால் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவன் வெகுளித்தனத்தை கண்டு வருந்தும் நாயகி அவனுக்கு ஆங்கிலம் கற்பிக்க துவங்கும் போதும் அவர்களிடையே துளிர்க்கும் நட்பு. அந்த நட்பு  மெல்ல மெல்ல காதலாக மலர துவங்கும் போது, அது தெரிந்து நாயகியின் அப்பாவும், அவள் குடும்பத்தினரும் திருமணத்துக்கு அழைப்பது போல் நாயகனை அழைத்து அறைக்குள் பூட்டி வைத்து அடித்து நொறுக்கி, அவன் முகத்தில் சிறுநீர் கழிக்க வைத்து அவமானப்படுத்தி, தன் மகளை காதலித்தால் "என் சாதிக்காரர்கள் உன்னோடு சேர்த்து என் மகளையும் கொன்று விடுவார்கள்' என்று கதறி நாயகனை அச்சுறுத்தும் காட்சியில் சாதிக்கும் மகள் பாசத்துக்கும் இடையே மாட்டி கொண்டு தவிக்கும் அப்பாவாக நம்மை கலங்க வைக்கிறார் மாரிமுத்து.  நட்போடு பழகி வந்ததற்கே தன்னை அடித்து உதைப்பவர்கள், காதலிக்க துவங்கினால் அவளை என்ன செய்வார்களோ? என்று அஞ்சி கதிர் ஆனந்தியோடு பேசாமல் விலகி செல்ல முயலும் போது அதை புரிந்து கொள்ள முடியாமல் ஆனந்தி தவிப்பதும், அவனை கோபித்து கொள்வதும், தன்னை விட்டு விலகி செல்லும் காரணம் தெரியாமல் கதிரை சுற்றி சுற்றி வந்து உருகுவதுமாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகி ஆனந்தி. படத்தில் கதிருக்கு தோழனாக வரும் யோகி பாபு அவ்வப்போது நம்மை சிரிக்க வைக்கிறார். 

கௌரவ கொலைகள் என்ற பெயரில் தான் செய்து வரும் கொலைகளை கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைத்து செய்வதாக சொல்லும் கொடூர குணம் கொண்ட, சாதாரண மனிதன் போல் காட்சியளிக்கும் சாதி வெறி பிடித்த கொலைகாரனாக வயதான வேடத்தில் நடித்திருப்பவர் மிரட்டி இருக்கிறார், கொலை என்பதே தெரியாத வகையில் ஏதோ விபத்து போல் காட்சியளிக்கும் வகையில் நரி தந்திரத்தோடு அவர் கொலைகளை செய்யும் விதம் நம்மை அதிர வைக்கிறது. தன் சாதியை சேர்ந்த சொந்தக்கார பெண்ணை தன்னோடு ஒரே வகுப்பில் கூட படிக்கும் கீழ் சாதியை சேர்ந்த ஒருவன் பேசி பழகி நெருங்குவது பிடிக்காமல் அவனை எப்படியாவது அவமானப்படுத்தி  கல்லூரி  படிப்பை விட்டு  ஓட  வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கதிரை ஆள் வைத்து அடிப்பது, லேடீஸ் டாய்லெட்டுக்குள் தள்ளி விட்டு கதவை அடைத்து கதற வைப்பது, கதிரின் அப்பாவை அரை நிர்வாணமாக்கி துரத்துவது என்று வில்லத்தனம் செய்து சாதி வெறியை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர்.      

இறுதி காட்சியில் நாயகன் கதிர் நீங்கள் எங்களை நாயாக நினைக்கும் வரை எதுவும் மாற போவதில்லை என்று ஆனந்தியின் அப்பாவிடம் பேசுவது போல் காட்சி அமைத்திருப்பது மனித மனங்களில் மாற்றம் ஏற்படாத வரை எதுவும் மாறாது என்பதை ஆணித்தரமாக கூறி இருக்கின்றார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமின் கேமரா விளையாடலும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் கிராமத்து சூழலுக்கு ஏற்ற பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 

சாதி, சாதி என்று சாதியை சொல்லி மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதனால் வயிறு வளர்த்து வரும் சாதி வெறியர்களுக்கு இந்த படம் சரியான சவுக்கடி.

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர்  - தமிழர் டைம்ஸ்

*** விமர்சனம் படித்தவர்கள் அவசியம் ஒரு முறை தியேட்டரில் சென்று படத்தை பாருங்கள். தமிழில் இது போன்ற நல்ல படங்கள் வெளிவர ஆதரவு தாருங்கள்.
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்