Wednesday, 21 August 2019

கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0


90'ஸ் கிட்ஸ்களுக்கு அவர்களின் காலத்து நகைச்சுவை சீரியல்கள் ஏதாவது  சிலவற்றை சொல்லச் சொன்னால் அதில் ரமணி vs ரமணி 
என்ற சீரியல் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். ஒரு கணவன் மனைவி, அவர்களின் சுட்டி பெண் குழந்தை இவர்களுக்கிடையே அவ்வப்போது சில சில்லறை சண்டைகளை மூட்டி விடும் உறவினர்கள், இதர கதாபாத்திரங்களை வைத்து கொண்டு அரை மணி நேரம்  - நேரம் போவது தெரியாமல் சிரிக்க வைக்க சீரியல் அது. 

மேலே சொன்ன சீரியலில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ஏதாவது சில சில்லறை விஷயங்களை செய்துவிட்டு அதனால் ஏற்படும் எதிர்பாராத பின்விளைவுகளால் பாதிக்கப்படும்போது அசடு வழிவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட அதே அசடு கணவன் மனைவி டைப் (சீரியல் இல்லை) - வெப் சீரிஸ்  தான் இப்போது வெளிவந்திருக்கும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0 இந்த வெப் சீரிஸில் கணவனான செந்தில் மட்டுமே அசடாக வருகிறார், மனைவி ஸ்ரீஜா கொஞ்சம் புத்திசாலியாக தோன்றுகிறார், 

ஆறு எபிசோடுகள் கொண்டிருக்கும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0 வெப் சீரிஸில் நம்மை சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் சில நல்ல கருத்துக்களை அங்கங்கே அள்ளி தெளித்திருக்கிறார்கள் (எ.கா) அதீத ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கண்டிக்கும் விதத்தில் ஒரு எபிசோடு நகைச்சுவை கலந்து எடுக்கப்படிருப்பது நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது, ஆனால் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கட்டுபடுத்துவது எல்லாம் இந்நாளில் நடக்கிற காரியமா என்று தெரியவில்லை, ஏனென்றால் இந்த வெப் சீரிசையே பல ரசிகர்கள் ஸ்மார்ட்போனில் தான் பார்த்து கொண்டிருப்பார்கள். 

லாஜிக் எல்லாம் பார்க்காமல் அரை மணி நேரம் சிரிக்க விரும்புவர்கள் தாரளாமாக ஒரு முறை பார்த்து சிரித்து மகிழுங்கள். 
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 11 October 2018

ராட்சசன் - திரைவிமர்சனம்முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமாரின் அடுத்த படம், முதல் படத்தில் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், இந்த படத்தில் நம்மை அதிர வைத்திருக்கிறார். நகரத்தில் வரிசையாக பள்ளி மாணவிகள் கடத்தப்படுகிறார்கள், மாணவிகள் கடத்தப்பட்ட இரண்டாம் நாளில்,  மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு  இறந்த நிலையில் அவர்களின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், சினிமாவில் இயக்குனராக முயற்சிக்கும் விஷ்ணு விஷால், ஒரு சைக்கோ கொலைகாரனின் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உலகம் முழுவதும் நடந்துள்ள பல சைக்கோதனமான தொடர் கொலைகள், சைக்கோ கில்லர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது சைக்கோதனமான நடவடிக்கைகள், அவர்கள் ஏன் அப்படி சைக்கோவாக மாறினார்கள் போன்ற தகவல்களை சேர்த்து வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கி, அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கேட்கிறார்.எவ்வளவோ முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காததால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் உறவினர் சிபாரிசில் கிடைக்கும் காவல் துறை பணியில் சேர்கிறார். அப்போது நடக்கும் சைக்கோதனமான தொடர் கொலைகளில் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை உயர் அதிகாரிகள் திணற, புதிதாக வேலைக்கு சேரும் விஷ்ணு விஷால் தான் ஏற்கெனவே திரைப்படம் எடுப்பதற்காக சேகரித்து வைத்துள்ள சைக்கோ கொலைகாரர்கள் பற்றிய தகவல்களோடு ஒப்பிட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் துப்பறியும் த்ரில்லர் கதை. 

விஷ்ணு விஷாலின் சகோதரி மகள் படிக்கும் வகுப்பு ஆசிரியையாக வருகிறார் அமலா பால், அக்கா மகளுக்காக விஷ்ணு விஷால் ரிப்போர்ட் கார்டில் அப்பா போல் கையெழுத்து போட்டு அமலா பாலிடம் மாட்டிகொள்ளும் போது விஷ்ணு விஷாலையே அப்பாவாக நடிக்க சொல்லி அழைத்து வந்து, இறுதியில் கையும் களவுமாக அமலா பாலிடம் சிக்கி வழியும் காட்சிகள், அமலா பால் வளர்க்கும் குழந்தை சூப்பர் மார்கெட்டில் சிசிடிவி இருப்பது தெரியாமல் செய்யும் பேனா, ஸ்கெட்ச் என்று சுட்டு டிரெஸ்சுக்குள் மறைத்து வைத்து கொள்ள, அது தெரிந்து விஷ்னு விஷால் பணம் செலுத்தி விட்டு செல்லும் காட்சிகள் எல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறது. 
மிகவும் விறுவிறுப்பாக செல்லும் த்ரில்லர் கதையின் இடையில் எதிர்பாராத திருப்பமாக கதாநாயகனின் சொந்த சகோதரி மகளும் (பள்ளி மாணவி) சைக்கோ கொலைகாரனால் கொல்லப்படுகிறார். வெறி கொண்டு கொலைகாரனை தேடி புறப்படும் விஷ்ணு விஷாலுக்கு தடைகற்களாக வழக்கமாக எல்லா துறைகளிலும் இருக்கும் சீனியர், ஜூனியர் ஈகோ பிரச்சினை வருகிறது, உயர் அதிகாரியாக வரும் பெண் அதிகாரி விஷ்ணு விஷாலுக்கு தன்னை விட அதிக திறமை இருப்பது தெரிந்தவுடன் அவரை மட்டம் தட்ட "உன் சினிமா கதையெல்லாம் இங்க வந்து சொல்லாதே போய் சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா" என்று சக காவலர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி துரத்துவது, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விஷ்ணு விஷாலை மட்டம் தட்டி பேசுவது என்று தன் அதிகார பலத்தை காண்பித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். 

# மீ டூ - ஹேஷ் டாக் வைரலாகி வரும் நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு வேலியாய் இருக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு டார்ச்சர் தருவதை காண்பித்து குற்றவாளி இவர் தான், குற்றவாளியை மடக்கி பிடித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் இருக்கும்போது மீண்டும் மாணவிகள் கடத்தப்பட்டு கொல்லப்படுவது எதிர்பாராத டிவிஸ்ட். சைக்கோ கொலையாளியிடம்  சிக்கி கொள்ளும் மாணவி, தான் கொல்லப்பட போவது அறிந்து பாத்ருமூக்குள் நுழைந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் நம்மை சீட் நுனிக்கு கண்டு வந்து உட்கார வைக்கும் திக் திக் ரகம். 

இடைவேளைக்கு பிறகு காட்டப்படும் அந்த கொடூர சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரம் அதிர வைக்கிறது, அவன் ஏன் அப்படி மாறினான் என்பதற்காக காண்பிக்கப்படும் ஃப்ளாஷ்பேக் கதை விழிகளில் கண்ணீரை வர வைக்கிறது, விஷ்ணு விஷாலின் சகோதரி கணவராக வரும் முனீஸ்காந்த், போஸ்ட் மார்டம் செய்யும் மருத்துவராக வரும் நிழல்கள் ரவி. விஷ்ணு விஷாலின் கூட பணிபுரியும் காவலராக வந்து சைக்கோ கொலைகாரனால் கொல்லப்படும் காளி வெங்கட் என்று எல்லோரும் தங்கள் பங்கை நிறைவாக  செய்திருக்கிறார்கள், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேகமாக செல்லும் கதையின் விறுவிறுப்புக்கு காமெராவும், இசையும் (கிப்ரான்) துணை புரிகிறது. 

திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரும், பள்ளி மாணவிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஒரு நல்ல சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் திரைப்படம் தந்ததற்காக ராம்குமார் & டீமுக்கு ஒரு சபாஷ் போடலாம். 

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர் - தமிழர் டைம்ஸ்

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 6 October 2018

நோட்டா - திரை விமர்சனம்


ன்றைய  அரசியல் களத்தில் நடைபெறும் கேலிகூத்தான பல நிகழ்வுகளை கொஞ்சம் நையாண்டியும், நிறைய சமூக அக்கறையும் கலந்து கொடுத்தால்  சினிமா ரசிகர்கள் கொண்டாட மாட்டார்களா என்ன? 

முதல்வராக இருக்கும் நாசர் ஒரு ஊழல் வழக்கில் சிக்கி கொள்ள, வழக்கின் தீர்ப்பு வெளிவரும் முன்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு (தன் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லோரையும் ஒதுக்கி விட்டு) சொந்த மகனை (விஜய் தேவரகொண்டா) முதல்வராக பதவியேற்க செய்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர் ஒரு போலி சாமியார். 

குடியும் கூத்துமாக ப்ளேபாய் போல் பார்ட்டி டான்ஸ் என்று ஊர் சுற்றி திரியும் கதாநாயகனுக்கு  (விஜய் தேவரகொண்டா), திடீரென்று ஒரு நாள் இரவில் யானை மாலை போட்டு ராஜா ஆவது போல் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு கிடைக்க, அதன் பின்னர் அவர்  சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளை சாதுரியமாக முறியடித்து மக்கள் செல்வாக்கையும் பெற்று சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்ந்து முதல்வராக இருந்து மக்களுக்கு நன்மை செய்ய முயலும் கதை.ஊழல் வழக்கில் தன் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை என்று தீர்ப்பு வர, சொந்த கட்சிக்காரர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தை நிறுத்த பொங்கி எழுந்து கொடுக்கும் புத்திசாலித்தனமானமிரட்டும் பேட்டி, அந்த பேட்டியால் கிடைக்கும் ரவுடி சிஎம் பட்டம், மழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட நகருக்குள் மக்கள் உயிருக்கு சேதம் ஏற்படாமல் காப்பற்ற இளைஞர்கள் துணையோடு எடுக்கும் அவசர கால நடவடிக்கை, நாயகன் இடைத்தேர்தலில் வெல்லும் வாய்ப்பை தட்டி பறிக்க எதிர்க்கட்சி வெளியிடும் அந்தரங்க வீடியோவை விளம்பர படம் என்று சொல்லி தப்பிப்பது என்று நன்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபத்திரத்தில் அதிரடியாக நடித்து கலக்கி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

ஸ்டிக்கர் பாலிடிக்ஸ், ரிசார்ட் கூத்துகள், அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் செய்யும் சாமியார், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சமகால அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவை நம் கண்களுக்கு முன் கொண்டு வருவதில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் துணையுடன் விஜய் தேவரகொண்டா வெற்றி பெற்றிருக்கிறார்.      

கதாநாயகனுக்கு சரியான நேரத்தில் அனுபவ ஆலோசனைகளை சொல்லி அவரை வழிநடத்தும் மூத்த பத்திரிக்கையாளராக சத்யராஜ், அங்கங்கே தனக்கே உரிய நையாண்டி கலந்த நச் வசனங்களுடன் அப்ளாஸ்களை அள்ளுகிறார். அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவராக நாசர் ஜொலிக்கிறார். தன் மனைவி சொன்ன வார்த்தையால் தன் சொந்த மகனையே தன் வாரிசு தானா என்று சந்தேகித்து வெறுப்புடன்நடத்துவது, தன்னை பின்னுக்கு தள்ளி விட்டு முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து இருக்க விரும்பும் மகனை அன்பொழுக பேசுவது போல் நடித்து கவிழ்க்க முயல்வது என்று குள்ளநரித்தனம் செய்யும் நிஜ அரசியல்வாதியாகவே நமக்கு தோன்றுகிறார் நாசர். நாசருக்கு கட்சியில் அடுத்த நிலையில் உள்ளவராக வரும் எம் எஸ் பாஸ்கர் அளவாக பயன்படுத்த பட்டிருக்கிறார்.  எதிர்கட்சி தலைவர் மகளாக வந்து நாயகனுக்கு சவால் விடும் காரெக்டரில் நடித்திருப்பவர் - சரியான தேர்வு. 

நாசர் - சத்யராஜ் இடையே வரும் அந்த கடந்த கால பிளாஷ்பேக் கொஞ்சம் எதிர்பாராத ட்விஸ்ட் தான், நாசர் செய்யும் ஊழல்களை எதிர்த்து பத்திரிக்கையில் எழுதும் சத்யராஜ், அவர் மகனுக்கு எப்படி நண்பராகி அரசியல் ஆலோசனைகள் சொல்கிறார் என்று தெரியவில்லை. சில காட்சிகளில் வரும் இடங்கள் செட் தான் என்று தெரியும் வகையில் எடுத்திருப்பது போன்ற சில மைனஸ்கள் இருந்தாலும் சுவாரஸ்யமான கதையோட்டத்தால் அது பெரிதாக தெரியவில்லை.

நோட்டா - ரசிகர்கள் தவறாமல் (பார்க்க) வாக்களிக்க வேண்டிய வேட்பாளர் தான்.

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர் - தமிழர் டைம்ஸ்

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday, 30 September 2018

பரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்


ந்த சமூகம் மனிதர்களை உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிரித்து அதன் மூலம் உயர்சாதியினர் தாழ்ந்த சாதி மக்களை நாய்களை போல் கேவலமாக தொடர்ந்து நடத்தி வருவதையும், காலகாலமாக உயர்சாதி மக்கள்  கீழ் சாதியினருக்கு இழைத்து வரும் அநீதிகளையும், தாழ்ந்த சாதி மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளையும், அவமானங்களையும் தைரியமாக தோலுரித்து காட்டியிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள்.

நாயகன் கதிர் வளர்த்து, வேட்டைக்கு பயன்படுத்தி வரும் செல்ல நாய் கருப்பியை உயர் சாதியினர் ரயில்வே டிராக்கில் கட்டி போட்டு இரக்கமில்லாமல் அந்த ஐந்தறிவு ஜீவனை அழிக்கும் காட்சியோடு
துவங்கும் திரைப்படம், வலிந்து திணிக்கபடாமல், படம் முழுவதும் இயல்பாக வரும் சம்பவங்களோடு நம்மையும் சேர்ந்து பயணிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் வெற்றி.  இந்த சமூகம் தங்கள் சாதி மக்களை கேவலப்படுத்தி வருவதையும், போலீஸ்காரர் ஒருவர்  வயது முதிர்ந்த மனிதர் என்று கூட பார்க்காமல் தன்னை எதிர்த்து பேசி விட்டார் என்பதற்காக காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைப்பதை கண்டு பொறுத்து கொள்ள முடியாமல் பி.எல் படித்து வழக்கறிஞர் ஆனால் தான் சட்டத்தின் துணையோடு தன் சமூக மக்கள்  இந்த அவமானங்களில் இருந்து விடுபட முடியும் என்ற உயர்ந்த குறிக்கோளோடு கல்லூரியில் பி.எல் படிக்க வரும் மாணவன் பரியேறும் பெருமாள் (கதிர்) சந்திக்கும் சோதனைகளையும், வேதனைகளையும் கண்ணீரோடு காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கும் அவர் டீமிற்கும் ஒரு சபாஷ். படிக்க வரும் கல்லூரியில் ஆங்கிலம் தெரியாததால் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவன் வெகுளித்தனத்தை கண்டு வருந்தும் நாயகி அவனுக்கு ஆங்கிலம் கற்பிக்க துவங்கும் போதும் அவர்களிடையே துளிர்க்கும் நட்பு. அந்த நட்பு  மெல்ல மெல்ல காதலாக மலர துவங்கும் போது, அது தெரிந்து நாயகியின் அப்பாவும், அவள் குடும்பத்தினரும் திருமணத்துக்கு அழைப்பது போல் நாயகனை அழைத்து அறைக்குள் பூட்டி வைத்து அடித்து நொறுக்கி, அவன் முகத்தில் சிறுநீர் கழிக்க வைத்து அவமானப்படுத்தி, தன் மகளை காதலித்தால் "என் சாதிக்காரர்கள் உன்னோடு சேர்த்து என் மகளையும் கொன்று விடுவார்கள்' என்று கதறி நாயகனை அச்சுறுத்தும் காட்சியில் சாதிக்கும் மகள் பாசத்துக்கும் இடையே மாட்டி கொண்டு தவிக்கும் அப்பாவாக நம்மை கலங்க வைக்கிறார் மாரிமுத்து.  நட்போடு பழகி வந்ததற்கே தன்னை அடித்து உதைப்பவர்கள், காதலிக்க துவங்கினால் அவளை என்ன செய்வார்களோ? என்று அஞ்சி கதிர் ஆனந்தியோடு பேசாமல் விலகி செல்ல முயலும் போது அதை புரிந்து கொள்ள முடியாமல் ஆனந்தி தவிப்பதும், அவனை கோபித்து கொள்வதும், தன்னை விட்டு விலகி செல்லும் காரணம் தெரியாமல் கதிரை சுற்றி சுற்றி வந்து உருகுவதுமாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகி ஆனந்தி. படத்தில் கதிருக்கு தோழனாக வரும் யோகி பாபு அவ்வப்போது நம்மை சிரிக்க வைக்கிறார். 

கௌரவ கொலைகள் என்ற பெயரில் தான் செய்து வரும் கொலைகளை கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைத்து செய்வதாக சொல்லும் கொடூர குணம் கொண்ட, சாதாரண மனிதன் போல் காட்சியளிக்கும் சாதி வெறி பிடித்த கொலைகாரனாக வயதான வேடத்தில் நடித்திருப்பவர் மிரட்டி இருக்கிறார், கொலை என்பதே தெரியாத வகையில் ஏதோ விபத்து போல் காட்சியளிக்கும் வகையில் நரி தந்திரத்தோடு அவர் கொலைகளை செய்யும் விதம் நம்மை அதிர வைக்கிறது. தன் சாதியை சேர்ந்த சொந்தக்கார பெண்ணை தன்னோடு ஒரே வகுப்பில் கூட படிக்கும் கீழ் சாதியை சேர்ந்த ஒருவன் பேசி பழகி நெருங்குவது பிடிக்காமல் அவனை எப்படியாவது அவமானப்படுத்தி  கல்லூரி  படிப்பை விட்டு  ஓட  வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கதிரை ஆள் வைத்து அடிப்பது, லேடீஸ் டாய்லெட்டுக்குள் தள்ளி விட்டு கதவை அடைத்து கதற வைப்பது, கதிரின் அப்பாவை அரை நிர்வாணமாக்கி துரத்துவது என்று வில்லத்தனம் செய்து சாதி வெறியை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர்.      

இறுதி காட்சியில் நாயகன் கதிர் நீங்கள் எங்களை நாயாக நினைக்கும் வரை எதுவும் மாற போவதில்லை என்று ஆனந்தியின் அப்பாவிடம் பேசுவது போல் காட்சி அமைத்திருப்பது மனித மனங்களில் மாற்றம் ஏற்படாத வரை எதுவும் மாறாது என்பதை ஆணித்தரமாக கூறி இருக்கின்றார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமின் கேமரா விளையாடலும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் கிராமத்து சூழலுக்கு ஏற்ற பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 

சாதி, சாதி என்று சாதியை சொல்லி மனிதர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி அதனால் வயிறு வளர்த்து வரும் சாதி வெறியர்களுக்கு இந்த படம் சரியான சவுக்கடி.

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர்  - தமிழர் டைம்ஸ்

*** விமர்சனம் படித்தவர்கள் அவசியம் ஒரு முறை தியேட்டரில் சென்று படத்தை பாருங்கள். தமிழில் இது போன்ற நல்ல படங்கள் வெளிவர ஆதரவு தாருங்கள்.
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday, 18 February 2018

முதலிடம் நோக்கி - சூற்றுசூழல் மாசு விழிப்புணர்வு குறும்படம்திருச்சி மாநகராட்சி தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள முதலிடம் நோக்கி குறும்படம் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்ள  மக்கள் தங்கள் பங்குக்கு என்ன செய்யலாம் என்று சொல்கிறது, வீடுகளில் சேரும் குப்பையை (மக்கும் குப்பை, மக்காத குப்பை) பிரிக்காமல் அப்படியே போடுவதால் நகராட்சி தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, மக்காத (பிளாஸ்டிக் குப்பைகள்) மண்ணில் சேர்வதால் சூற்றுசூழல் மாசுபடுவது என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கபட்டுள்ள இந்த குறும்படத்தை பார்த்த பிறகாவது மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க  குப்பைகளை அலட்சியமாக தெருவில் வீச மாட்டார்கள் என்று நம்பலாம். திருச்சி நகர மக்கள் மட்டுமல்ல, குடியிருக்கும் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா நகர மக்களும் இந்த  குறும்படத்தை ஒரு முறை பார்த்தால் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படும்.... 

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 10 February 2018

உணர்ச்சி - குறும்படம்

வாழ்க்கையில் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளால் சிலர் வேறு வழியின்றி பாதை மாறி போய் விடுவது உண்டு, ஆனால் நல்மனம் கொண்ட உள்ளங்கள் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவும் போது தவறு செய்கிறவர்கள் மீண்டும் நல்வழியில் நடக்க துவங்குகின்றனர், இந்த குறும்படத்தில் வரும் தாயின் கதாபாத்திரமும், குறும்படத்தின் இறுதியில் ஒரு தாயின் வேதனை உணர்ச்சியை புரிந்து கொண்டு திருந்தும் இளைஞனின் கதாபாத்திரமும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். 

ஒவ்வொரு மனிதினும், சக மனிதர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ தொடங்கினால்  இந்த பூமியே சண்டை, சச்சரவில்லாத அமைதி பூங்காவாக மாறும் என்று சொல்கிறது உணர்ச்சி - குறும்படம்.

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday, 3 February 2018

I AM WATER - குறும்படம்


சாதிகள் இல்லையடி பாப்பா என்று முண்டாசு கவிஞன் பாரதியார் என்றோ பாடல் இயற்றி சாதி வேறுபாடு பார்க்க கூடாது என்று வலியுறுத்தி இருந்தாலும் இன்றும் நம் நாட்டில் சாதி பார்த்து உயர்வு, தாழ்வு பாராட்டும் மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர், இது போன்ற சாதி வெறி பிடித்தவர்களால் நாட்டில் சாதியின் பெயரால் வன்முறை வெறியாட்டங்கள் பல நடந்துள்ளன, அதனால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், ஆனாலும் சாதி பேதம் பார்ப்பவர்கள் இன்னும் திருந்தியதாக தெரியவில்லை, வானிலிருந்து பொழியும் மழை நீர் பூமியில் வாழும் மனிதர்கள் மீது சாதி பார்த்து பொழிவதில்லை... குடிக்கும் தண்ணீரை கொண்டு மிக அழகாக சாதி வேறுபாடு பார்ப்பவர்களுக்கு அருமையாக செய்தி சொல்கிறது I AM WATER - குறும்படம்   

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்