Saturday 26 October 2019

கைதி - திரைவிமர்சனம்


தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்துள்ளது, பி நாராயணபுராவில் உள்ள புஷ்பாஞ்சலி திரையரங்கத்தில் மேட்னி ஷோவில் கைதி திரைப்படத்தை இன்று பார்த்தேன். (விமர்சனம் சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டுள்ளது)

கதை: இந்தப் படம் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுவென்று செல்கிறது. கதை என்று பார்த்தால் பல நூறு கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கைப்பற்றி அதை ரகசியமாக வைத்திருக்கும் போலீசார், அந்த போலீசாரில் தங்களுக்கு எதிராக தீவிரமாக செயல்படும் சிலரை கொன்றுவிட்டு போதைப் பொருட்களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போதை கும்பல் தலைவனையும் விடுவிக்கத் துடிக்கும் கொலை வெறி பிடித்த போதை ரவுடி கும்பல், அவர்களிடமிருந்து சூழ்நிலை காரணமாக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தன் சக காவலர் குழுவை மருத்துவமனையில்  சேர்த்து உயிரை காப்பாற்ற துடிக்கும் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி,  ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து பத்து வருடங்களாக தன் மகளைப் பார்க்க முடியாமல்  தவித்து சிறையிலிருந்து மகளை பார்க்கும் ஆவலுடன் வெளிவரும் கார்த்தி, இந்த கொலை வெறியுடன் திரியும் போதை கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையில் சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொள்கிறார், அனாதை இல்லத்தில் தன்னை பார்க்க வரும் யார் என்றே தெரியாத ஒரு உறவை ஆர்வத்துடன் பார்க்க காத்திருக்கும் கார்த்தியின் மகள், இவரை கார்த்தி சந்தித்தாரா போதை கும்பலிடம் இருந்து போலீஸ் குழுவினரை கார்த்தி காப்பாற்றினாரா? என்பதை ஆக்சன் சரவெடியோடு  ரசிகர்களுக்கு  தீபாவளி விருந்தாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் கேமரா கோணங்களிலும் ஹாலிவுட் படங்களைப் போன்று இந்த படத்தை எடுத்துள்ளனர். படம் முழுவதும் இரவு நேரத்திலேயே கதை நடப்பதால் முழுக்க முழுக்க இருட்டு பின்னணியில் படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் சீரியஸான திரைக்கதை கொண்ட படமென்றாலும் இடையில் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் சில வசனங்கள் அந்த பரபரப்பையும் மறந்து சிரிக்க வைத்து விடுகிறது உதாரணத்திற்கு டிரங்கன் டிரைவ் செய்து போலீசாரிடம் மாட்டிக் கொள்ளும் கல்லூரி மாணவர்களிடம் இன்ஜினியரிங் படிச்சவங்களா இப்படி குடிக்கிறீங்க? என்று கேட்கும் போலீசாருக்கு இன்ஜினியரிங் படிச்சதனால தான் சார் இப்படி குடிக்கிறோம் என்று கல்லூரி மாணவர்கள் பதில் சொல்லும்போது  தியேட்டரில் சிரிப்பலை. இதுபோன்று படம் நெடுகிலும் அங்கங்கே சில வசனங்கள் சிரிப்பையும் சில வசனங்கள் சுரீரென்று மனதை தைக்கும்படியும்  இருக்கிறது. பத்து வருஷத்துல நிறைய மாறிடுச்சு பாருங்க முன்னாடி எல்லாம்  போலீஸ் தான் மக்களை காப்பாத்துவாங்க இப்ப போலீஸ  நம்ம காப்பாத்த வேண்டியதா இருக்கு என்று கார்த்தியிடம் கேட்டரிங் பையன் சொல்லும் இடம் நச் ரகம் . 

லாரியை ரவுடி கும்பல் மறித்து தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் கார்த்தி களத்தில் இறங்கி ரவுடிகளை அதகளம் செய்யும் காட்சி காட்சிகள் அசத்தல் ரகம், கிளைமாக்சிலும் மீண்டும் அடிதடி காட்சி தானோ என்று நினைக்கும் வேளையில் எதிர்பாராத டிவிஸ்ட் ஆக வரும் கிளைமாக்ஸ் காட்சியமைப்பு அதிரடியாக இருக்கிறது.

டில்லியாக படம் முழுக்க லாரி ஓட்டிக் கொண்டே வழியில் வரும் ரவுடி கும்பல்களை அதகளம் செய்யும் கார்த்தி,  நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நரேன் (பிஜோய்), நான்கு கல்லூரி மாணவர்களை மட்டும் கமிஷனர் ஆபிஸுக்குள் வைத்து கொண்டு லாக்கப்புக்கு உள்ளேயும், கமிஷனர் அலுவலகத்துக்கு வெளியேயும் மிரட்டும்  ரவுடி கும்பலுக்கு தண்ணி காட்ட பயத்துடன், பதட்டத்துடன் முயற்சிக்கும் நெப்போலியன் கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியான் என்று எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். எந்த தடங்கலுமில்லாமல் நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை, படத்தில் எந்த ஒரு காட்சியும் தேவையில்லை என்று ஒதுக்க முடியாதபடி எடிட் செய்யப்பட்டுள்ள பிலோமின் ராஜின் நேர்த்தியான  எடிட்டிங், இருட்டான காட்சியமைப்புகளையும், ஆக்சன் அதிரடி காட்சிகளையும் லாவகமாக கேமராவுக்குள் சுருட்டி நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கும் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , ஒரு ஆக்சன் படத்திற்கு தேவையான அதிர வைக்கும் பின்னணி இசையை தந்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இயக்கி சிறந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படத்தை தந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள். படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் கிடையாது, நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லர் படம் பார்த்த  திருப்தி. 

ஹாட்ஸ் ஆஃப் லோகேஷ் கனகராஜ் & டீம்.
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்