Wednesday, 20 November 2019

தி ஃபேமிலி மேன் - வெப்சீரீஸ் விமர்சனம்


தை:
அரசின் கட்டுப்பாட்டில் ரகசியமாக இயங்கும் சில துறைகள் உண்டு, அது போன்ற ஒரு துறையான டாஸ்க்கில் ஒரு ரகசிய ஏஜென்டாக பணிபுரிபவர்  ஸ்ரீகாந்த் திவாரி, இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் என்று அழகான குடும்ப பின்னணி உண்டு. ரகசியமாக இயங்கும் தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்து அவர்கள் சதித்திட்டங்களை செயல்படுத்தும் முன்பே அதை தடுத்து நிறுத்துவது தான் டாஸ்க்கின் முக்கியமான பணி. இந்த பணியில் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது, எந்த நேரத்திலும், தீவிரவாதிகளால்  உயிருக்கு ஆபத்து நிழல் போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த ரிஸ்க்கான வேலையில் இருப்பதை குடும்பத்திற்கு மறைத்து அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்ப்பதாக குடும்பத்தினரிடம் கதைவிட்டு, நிஜத்தில் தீவிரவாத குழுக்களின் சதித்திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதே தி ஃபேமிலி மேன் - வெப்சீரீஸின் கதை. டெல்லியை குறி வைக்கும் ஒரு பெரும் தீவிரவாத தாக்குதலை தடுக்கும் நோக்கத்தில் துவங்கும் தீவிவாத வேட்டையானது டெல்லியில் துவங்கி காஷ்மீர், பலோசிஸ்தான், குவெட்டா என்று பயணித்து மீண்டும் டெல்லியில் வந்து முடிகிறது.இந்த கதையில் கதாநாயகனான ஸ்ரீகாந்த் திவாரியின் மனைவியாக வரும் சுச்சி கதாபாதிரத்தில் பிரியாமணி, அரைத்த மாவையே அரைக்கும் பேராசிரியர் வேலையை விட்டு விட்டு தன் நண்பனின் ஸ்டார்ட் அப்பில் இணைந்து பணிபுரிய விரும்பும் சுச்சி,  இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் வழக்கமாக நடுத்தர குடும்பங்களில் வரும் மோதல்கள், பள்ளி செல்லும் டீனேஜ் மகளின் தவறான நட்புகளால் வரும் இடர்கள் என்று சீரீஸ் முழுவதும் வரும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக கதையை நகர்த்த உதவி இருக்கிறது.  

மனோஜ் பாஜ்பாயின் அசர வைக்கும் இயல்பான நடிப்பு: 
தீவிரவாதிகள் என்று நினைத்து சில கல்லூரி மாணவர்களை சுட்டு பிடிக்க முயலும்போது, அப்பாவிகளான அவர்கள் இறந்துவிட பின்னர் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று தெரியும்போது முகத்தில் தெறிக்கும் குற்ற உணர்வு, டீனேஜ் மகளின் ஆண் நண்பர்களை யார்? அவர்கள் எப்படிபட்டவர்களோ? என்று அறிந்து கொள்ள துடிக்கும் போதும் முகத்தில் காட்டும் தவிப்பு, தன் மனைவி வழி தவறி செல்கிறாளோ என்று சந்தேகப்பட்டு அவளை பின் தொடர்ந்து கண்காணித்து அவளிடம் காட்டும் எரிச்சல் என்று மனோஜ் பாஜ்பாயின் நடிப்பு பசிக்கு சீரீஸ் முழுவதுமே நிறைய தீனி போடப்பட்டிருக்கிறது. 

வில்லனாக வரும் நீரஜ் மாதவின் நடிப்பு அசத்தல் ரகம்:
கதையின் ஆரம்பத்தில் கடற்படையினர் கையில் சிக்கும் ஐஸ்ஐஸ் தீவிரவாத குழுவிவில் அங்கம் வகிக்கும் மூஸா என்பவனை பிடிக்கும் போது, குண்டடிபட்டு காயமடையும் அவனை மருத்துவமனையில் வைத்து  சிகிச்சையளிக்கும் போது அப்பாவி போல் நடிக்கும் அவனது உண்மை முகம் தெரிகிறது, தப்பிக்க முயலும் அவனை மீண்டும் பிடிக்க முற்படும் போது நடக்கும் அசம்பாவிதங்கள், அதன் பின் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் வெப் சீரீஸ் என்பதை மறந்து ஒரு சினிமா பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது. அப்பாவி போல் நடித்து பின் தன கோரமுகத்தை காட்டும் தீவிரவாதி மூசாவாக நடித்திருக்கும் நீரஜ் மாதவின் நடிப்பு அசத்தல் ரகம்.

சீரியசான கதையில் இடையில் வரும் சில சிறிய கதாபாத்திரங்களிடம் மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவர் கூடவே பயணிக்கும் அலுவலக நண்பரான ஷரிப் ஹாஷ்மி பேசும் வசனங்கள் சீரியஸ்னஸ் மறந்து நம்மை சிரிக்க வைக்கிறது, உதாரணத்திற்கு, ஆபிசர் அலுவலகத்திற்கு ஏன் லேட்டாக வருகிறீர்கள் என்று போனில் கேட்க மனோஜ் பாஜ்பாயி தான் சாப்பிட்டு கொண்டிருக்கும் வடா பாவ் விற்பவனையே - அவனை கண்ணெதிரே பார்த்து கொண்டே அவன் விபத்தில் இறந்து விட்டதாக கதை விடுவது, பிள்ளைகளிடம் ஸ்கூலுக்கு காரில் பயணிக்கும் போது நடக்கும் உரையாடல்கள் எல்லாம் வெடிசிரிப்பை வரவழைக்கிறது, அதுவும் அந்த பொடியன், தன் அப்பா ஒருவனை சாத்துவதை கண்டுவிட அதை அம்மாவிடம் சொல்லாமல் இருக்க பீஸா. ஐஸ்க்ரீம் என்று ஒவ்வொன்றாக அப்பாவையே பிளாக்மெயில் செய்து வாங்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு ரகம். இந்த இடங்களில் எல்லாம் வசனம் எழுதியுள்ள சுமித் அரோராவின் வசனங்கள் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. 

ராஜ் மற்றும் டி கே யின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தி ஃபேமிலி மேனை ஆக்சன் த்ரில்லர் கலந்த சுவாரஸ்யமான குடும்ப கதை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.
--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்