Saturday 6 October 2018

நோட்டா - திரை விமர்சனம்


ன்றைய  அரசியல் களத்தில் நடைபெறும் கேலிகூத்தான பல நிகழ்வுகளை கொஞ்சம் நையாண்டியும், நிறைய சமூக அக்கறையும் கலந்து கொடுத்தால்  சினிமா ரசிகர்கள் கொண்டாட மாட்டார்களா என்ன? 

முதல்வராக இருக்கும் நாசர் ஒரு ஊழல் வழக்கில் சிக்கி கொள்ள, வழக்கின் தீர்ப்பு வெளிவரும் முன்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு (தன் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லோரையும் ஒதுக்கி விட்டு) சொந்த மகனை (விஜய் தேவரகொண்டா) முதல்வராக பதவியேற்க செய்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர் ஒரு போலி சாமியார். 

குடியும் கூத்துமாக ப்ளேபாய் போல் பார்ட்டி டான்ஸ் என்று ஊர் சுற்றி திரியும் கதாநாயகனுக்கு  (விஜய் தேவரகொண்டா), திடீரென்று ஒரு நாள் இரவில் யானை மாலை போட்டு ராஜா ஆவது போல் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு கிடைக்க, அதன் பின்னர் அவர்  சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளை சாதுரியமாக முறியடித்து மக்கள் செல்வாக்கையும் பெற்று சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்ந்து முதல்வராக இருந்து மக்களுக்கு நன்மை செய்ய முயலும் கதை.



ஊழல் வழக்கில் தன் தந்தைக்கு ஐந்தாண்டு சிறை என்று தீர்ப்பு வர, சொந்த கட்சிக்காரர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தை நிறுத்த பொங்கி எழுந்து கொடுக்கும் புத்திசாலித்தனமானமிரட்டும் பேட்டி, அந்த பேட்டியால் கிடைக்கும் ரவுடி சிஎம் பட்டம், மழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட நகருக்குள் மக்கள் உயிருக்கு சேதம் ஏற்படாமல் காப்பற்ற இளைஞர்கள் துணையோடு எடுக்கும் அவசர கால நடவடிக்கை, நாயகன் இடைத்தேர்தலில் வெல்லும் வாய்ப்பை தட்டி பறிக்க எதிர்க்கட்சி வெளியிடும் அந்தரங்க வீடியோவை விளம்பர படம் என்று சொல்லி தப்பிப்பது என்று நன்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபத்திரத்தில் அதிரடியாக நடித்து கலக்கி இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

ஸ்டிக்கர் பாலிடிக்ஸ், ரிசார்ட் கூத்துகள், அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸ் செய்யும் சாமியார், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சமகால அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவை நம் கண்களுக்கு முன் கொண்டு வருவதில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் துணையுடன் விஜய் தேவரகொண்டா வெற்றி பெற்றிருக்கிறார்.      

கதாநாயகனுக்கு சரியான நேரத்தில் அனுபவ ஆலோசனைகளை சொல்லி அவரை வழிநடத்தும் மூத்த பத்திரிக்கையாளராக சத்யராஜ், அங்கங்கே தனக்கே உரிய நையாண்டி கலந்த நச் வசனங்களுடன் அப்ளாஸ்களை அள்ளுகிறார். அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவராக நாசர் ஜொலிக்கிறார். தன் மனைவி சொன்ன வார்த்தையால் தன் சொந்த மகனையே தன் வாரிசு தானா என்று சந்தேகித்து வெறுப்புடன்நடத்துவது, தன்னை பின்னுக்கு தள்ளி விட்டு முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து இருக்க விரும்பும் மகனை அன்பொழுக பேசுவது போல் நடித்து கவிழ்க்க முயல்வது என்று குள்ளநரித்தனம் செய்யும் நிஜ அரசியல்வாதியாகவே நமக்கு தோன்றுகிறார் நாசர். நாசருக்கு கட்சியில் அடுத்த நிலையில் உள்ளவராக வரும் எம் எஸ் பாஸ்கர் அளவாக பயன்படுத்த பட்டிருக்கிறார்.  எதிர்கட்சி தலைவர் மகளாக வந்து நாயகனுக்கு சவால் விடும் காரெக்டரில் நடித்திருப்பவர் - சரியான தேர்வு. 

நாசர் - சத்யராஜ் இடையே வரும் அந்த கடந்த கால பிளாஷ்பேக் கொஞ்சம் எதிர்பாராத ட்விஸ்ட் தான், நாசர் செய்யும் ஊழல்களை எதிர்த்து பத்திரிக்கையில் எழுதும் சத்யராஜ், அவர் மகனுக்கு எப்படி நண்பராகி அரசியல் ஆலோசனைகள் சொல்கிறார் என்று தெரியவில்லை. சில காட்சிகளில் வரும் இடங்கள் செட் தான் என்று தெரியும் வகையில் எடுத்திருப்பது போன்ற சில மைனஸ்கள் இருந்தாலும் சுவாரஸ்யமான கதையோட்டத்தால் அது பெரிதாக தெரியவில்லை.

நோட்டா - ரசிகர்கள் தவறாமல் (பார்க்க) வாக்களிக்க வேண்டிய வேட்பாளர் தான்.

விமர்சனம்: வெற்றிவேந்தன் ஷங்கர் - தமிழர் டைம்ஸ்

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்