Saturday 20 January 2018

டீ ஸ்பூன் - குறும்படம்

வீட்டையும் கவனித்து கொண்டு வீட்டிலிருந்தபடியே அழகு சாதன பொருட்கள் விற்கும் ஒரு குடும்ப தலைவி, அவளது கணவருக்கு இன்சூரன்ஸ் துறையில் ஓயாமல் அலைந்து கொண்டிருக்கும் வேலை. பக்கத்து வீட்டு பெண்ணோடு தொலைக்காட்சி சீரியலில் வரும் கதைகளை விமர்சித்து அரட்டை அடிப்பதில்,  சீரியலில் வரும் கணவனை போல் தன கணவனும் இருப்பானோ என்று சந்தேகப்பட்டு கணவனிடம் உங்க அலுவலகத்தில் செகரெட்டரி யாரும் இல்லையா? என்று கேட்கும் சராசரி குடும்ப பெண். வாதம் வந்து படுக்கையில் விழுந்து விடும் பேசும் சக்தியை இழந்த வயதான முதியவரான தன் கணவனின் தந்தையை பாசத்தோடு கவனித்து கொண்டாலும், எதாவது முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த முதியவர் மருமகளை அழைப்பதற்கு டீ ஸ்பூனை கொண்டு 'டொக் டொக்' சத்தம் எழுப்பும் போது பொங்கி வரும் கோபத்தை அடக்கி கொண்டு பொறுமையாக செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ ஸ்வரா இயல்பாக நடித்திருக்கிறார். வீட்டிலேயே இருந்து முதியவரை கவனித்து கொள்ள வேண்டியிருப்பதால் வெளியில் கணவனோடு சேர்ந்து எங்கும் செல்ல முடியாத கோபம் ஒரு பக்கம், இன்னொரு புறம் கணவன் வீட்டில் இருக்கும் போது அமைதியாக இருக்கும் முதியவர், கணவன் வெளியில் சென்ற பின் தன்னை வேலை வாங்குவதாக நினைத்து வரும் வெறுப்பு உணர்வு, ஒரு கட்டத்தில் பொறுமை மொத்தமாக கரைந்து போய் ஆத்திரத்தின் உச்சகட்டத்தில் அவள் ஒரு விநாடி மதியிழந்து செய்யும் செயல்.... யாருக்கும் தெரியாது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்து இருக்கும் போது மீண்டும்கேட்கும் டீ ஸ்பூனின் 'டொக் டொக்' சத்தம்... எவ்வளவு காலமானாலும் எப்போது அந்த டீ ஸ்பூனின் 'டொக் டொக்' சத்தம் கேட்டாலும் மனதில் அச்சத்துடன் குற்ற உணர்வு தோன்றுமே.... 

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்